முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 133.ஊடல் உவகை
திருக்குறள் - 133.ஊடல் உவகை
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்ல(து) அவர்அளிக்கு மாறு. |
1321 |
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
ஊடலில் தோன்றம் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். |
1322 |
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
புலத்தலின் புத்தேள்நா(டு) உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. |
1323 |
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. |
1324 |
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலி னாங்கொன் றுடைத்து. |
1325 |
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
உணலினும் உண்ட(து) அறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. |
1326 |
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். |
1327 |
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. |
1328 |
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா. |
1329 |
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். |
1330 |
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
133.ஊடல் உவகை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - ஊடுதல், ஊடலில், இன்பம், கூடலில், முடிந்த, இன்னும், இன்பமானது, ஊடலுக்கு, பெறும், literature, இலக்கியங்கள்