கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி, வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;- கடிது இடி வானம் உரறும், நெடு இடைச் சென்றாரை, 'நீடல்மின்' என்று. |
6 |
மாவடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களையுடையாய்! கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்காமல் நிற்கும். ஆதலால் வருந்தாதே.
நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும், தற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்!- பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல எச் சாரும் மின்னும், மழை. |
7 |
தளர்ந்த இயல்பினையுடையாய்! தம்மை விரும்பியடைந்தார்க்கு ஈதலும், அடையாத பகைவரை அழித்தல் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மறப்பில்லாத புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழை வானமானது கொண்டு வரும்.
மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி, பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்- கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும் நுண் அரும்பு ஊழ்த்த புறவு. |
8 |
பெண் தகைமையையுடைய நல்லாய்! மண் நிறைந்த உலகத்து நிலை பெறும் புகழை விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் வருதலைக் கண்களில் தீட்டிய மையினைப் போன்று காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள் சொல்லும்.
கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று; எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும், இன் சொல் பலவும் உரைத்து. |
9 |
கார் கால்த்தில் கண் மலர் போலப் பூத்த கருவிளம்பூக்களும், தீயினது அழகையுடைய பூக்களும், வரியையுடைய வளைகள் முன்னங்கையினின்று கழல, இனிய சொற்கள் பலவும் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவர் வருவார் என்பதனைக் கூறும்.
வான் ஏறு வானத்து உரற, வய முரண் ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக், கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் - என் தோழி!- மேனி தளிர்ப்ப, வரும். |
10 |
என் தோழியே! வானத்தில் ஏற்படும் இடியின் ஓசை மிகுந்த இக்காலத்தில் வலியினையும், மாறுபாட்டினையும் உடைய எருமை வெகுளுமாறு, குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர் காட்டாற்றின் ஒலி போலும் ஒலி எழுப்பி உன் மேனி தழைக்க வருவார் என்று கூறியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, கார், இலக்கியங்கள், சென்ற, கூறும், நாற்பது, பதினெண், இயல், கீழ்க்கணக்கு, தலைவர், பிரிந்து, வருவார், மேனி, தேர், பலவும், ஏற்று, வரும், ஈதலும், அகன்ற, சங்க, புகழ், மின்னும், நல்லாய், பெண், வரல்