முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.074.திருஎறும்பியூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.074.திருஎறும்பியூர்
5.074.திருஎறும்பியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எறும்பீசுவரர்.
தேவியார் - நறுங்குழல்நாயகியம்மை.
1810 | விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன் இரும்பி னூறல றாததோர் வெண்தலை எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. |
5.074.1 |
அறியாமை உடைய நெஞ்சமே! வெண்தலையைக் கையில் உடையவனும், எறும்பியூர் மலையானும் ஆகிய எங்கள் ஈசன், கலந்த அடியவர்களுக்குக் கரும்பின் ஊறல் போல்வான். அவனை விடாது விரும்பியுறுவாயாக.
1811 | பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க் கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல் நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. |
5.074.2 |
எங்கள் இறைவன், விளங்கும் செஞ்சடையையுடைய பிஞ்ஞகனும், பேணுகின்ற புகழை உடைய சுழன்றாடும் இயல்புடைய பூதகணங்களை உடையவனும், நெற்றிக்கண்ணனும் ஆகி, மணம் வீசும் கூந்தலை உடைய உமாதேவியோடு நாள்தோறும் விளங்கும் எறும்பியூர் மலையினன் ஆவன்.
1812 | மருந்து வானவர் தானவர்க் கின்சுவை புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல் பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. |
5.074.3 |
எங்கள் இறைவன் வானவர்க்கு மருந்தாகவும், தானவர்க்கு இன்சுவையாகவும், முறுக்குண்ட புன்சடையை உடைய புண்ணியனாகவும், நெற்றிக்கண்ணனாகவும், பூண்கள் பொருந்தும் முலையையுடைய மங்கை நல்லாளொடும் மேவும் எறும்பியூர் மலையினன் ஆவன்.
1813 | நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய் அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. |
5.074.4 |
எம் இறைவன் நீலநிறம் கொண்ட கண்டத்தை உடைய நின்மலனும், மறம் கொண்ட வேல்போன்ற கண்ணையும், ஒளியுடைய நுதலையும் உடைய மங்கை ஒருபாகமாகி அறம் புரிந்து அருள் செய்த எம் அண்ணலும் ஆகிய எறும்பியூர் மலையினன் ஆவன்.
1814 | நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும் துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான் உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. |
5.074.5 |
நறுமணமும் பொன்போன்ற நிறமும் உடைய கொன்றையின் புதிய பூக்களும், நாகமும் சுரும்புகள் அடர்ந்தது போன்ற சிவந்த சடையின்கண் தூயமதியோடு வைத்து, விண்ணை உறும் பொன்மலையாகிய இமவான்மகளாகிய உமாதேவியோடு ஊர் தோறும் வீற்றிருக்கும் எங்கள் இறைவன், எறும்பியூர் மலையினன்.
1815 | கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில் திறம்பி யூர்வன மற்றும் பலவுள குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை எறும்பி யூரரன் செய்த இயற்கையே. |
5.074.6 |
சினந்து ஊர்வனவாகிய ஐம்பொறிகள் உள்ள உடம்பில், மாறுபட்டு ஊர்வன மற்றும் பல உள்ளன; அழுக்கு ஊர்வதாகிய கூடுபோன்ற அவ்வுடம்பின்கண் இட்டு என்னை எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது.
1816 | மறந்து மற்றிது பேரிடர் நாடொறும் திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே. புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை எறும்பி யூரரன் செய்த வியற்கையே. |
5.074.7 |
அறிவற்ற நெஞ்சமே! பெருந்துன்பங்களால் நாள்தோறும் மற்று இதனை மறந்து மாறுபட்டு நீ நினையாதே; புறத்தேகோலம் செய்யப்பெற்ற இக்குடிசையில் என்னை இட்டு எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது.
1817 | இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு துன்ப மும்முட னேவைத்த சோதியான் அன்ப னேயர னேயென் றரற்றுவார்க் கின்ப னாகு மெறும்பியூ ரீசனே. |
5.074.8 |
எறும்பியூர் இறைவன் இன்பமும் பிறப்பும், துன்பமும் இறப்பும் உடன் வைத்த சோதிவடிவினனும், "அன்பனே! அரனே!ழு என்று வாய்விட்டு அரற்றுவார்க்கு இன்பமளிப்பவனும் ஆவன் .
1818 | கண்நி றைந்த கனபவ ளத்திரள் விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான் உள்நி றைந்துரு வாயுயி ராயவன் எண்நி றைந்த வெறும்பியூ ரீசனே. |
5.074.9 |
எண்ணமெங்கும் நிறைந்த எறும்பியூர் இறைவன், கண்ணுக்கு நிறைந்த பெருமைமிக்க பவளத்திரளும், விண்ணில் நிறைந்த சுடர் விரிகின்ற சோதி வடிவானவனும், உள்ளத்துள் நிறைந்து உருவாகி உயிராகியவனும் ஆவன்.
1819 | நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும் நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான் எறும்பி யூர்மலை யெம்மிறை காண்மினே. |
5.074.10 |
எறும்பியூர் மலைக்குரிய எம்மிறைவன், நறுமணம் வீசும் கூந்தலையும் இளமையையும் உடைய உமாதேவி நடுக்கம் எய்திட வெண்ணிறம் கொண்ட திருக்கயிலைப் பெருமலையை வீரம் கொண்ட வாளை உடைய இராவணன் ஊன்றி எடுத்தலும், அவன் ஆற்றலை வாடுமாறு செய்தான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஎறும்பியூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எறும்பியூர், எறும்பி, யூர்மலை, இறைவன், யானெங்க, மலையினன், எங்கள், நெஞ்சமே, நிறைந்த, திறம்பி, யூர்வன, நாகமும், மற்றும், யூரரன், மறங்கொள், இயற்கை, மாறுபட்டு, மறந்து, சோதியான், வீசும், கண்ணுதல், உடையவனும், திருச்சிற்றம்பலம், திருமுறை, நறுங்கு, நாடொறும், நாள்தோறும், உமாதேவியோடு, திருஎறும்பியூர், விளங்கும், நிறங்கொள்