முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.069.திருக்கருவிலி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.069.திருக்கருவிலி
5.069.திருக்கருவிலி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணநாதர்.
தேவியார் - சர்வாங்கநாயகியம்மை.
1760 | மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப் பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் கட்டிட் டவினை போகக் கருவிலிக் கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. |
5.069.1 |
தேனையுடைய மலர்களைவைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக. கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக.
1761 | ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும் ஏல மாமல ரோடிலை கொண்டுநீர் கால னார்வரு தன்முன் கருவிலிக் கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. |
5.069.2 |
உலகில் நிறைந்த மனிதர்களே! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு, நீர்உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1762 | பங்க மாயின பேசப் பறைந்துநீர் மங்கு மாநினை யாதே மலர்கொடு கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக் கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. |
5.069.3 |
குற்றமுடையவற்றைப் பேசுதலால், நீர் மங்குமாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு, கங்கை சேர்ந்த சடையானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1763 | வாடி நீர்வருந் தாதே மனிதர்காள் வேட னாய்விச யற்கருள் செய்தவெண் காட னாருறை கின்ற கருவிலிக் கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. |
5.069.4 |
மனிதர்களே! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1764 | உய்யு மாறிது கேண்மி னுலகத்தீர் பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக் கையி னானுறை கின்ற கருவிலிக் கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. |
5.069.5 |
உலகத்தில் உள்ளவர்களே! இதுவே உய்யும்வழி; கேட்பீராக; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும்,மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற, கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1765 | ஆற்ற வும்அவ லத்தழுந் தாதுநீர் தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி காற்று மாகிநின் றான்றன் கருவிலிக் கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே. |
5.069.6 |
நீர், மிகவும் துன்பத்தில் அழுந்தாமல், தோற்றுகின்ற தீ, நீர், நிலம், விசும்பு, காற்று ஆகி நின்றவனும், கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.
1766 | நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப் பொல்லா வாறு செயப்புரி யாதுநீர் கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக் கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே. |
5.069.7 |
நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச் செய விரும்பாது, நீர், கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.
1767 | பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா றுணர்த்த லாமிது கேண்மி னுருத்திர கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக் குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே. |
5.069.8 |
உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும், எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1768 | நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும் எம்பி ரானென் றிமையவ ரேத்துமே கம்ப னாருறை கின்ற கருவிலிக் கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே. |
5.069.9 |
மனிதர்களே! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக; நாள்தோறும் தேவர்கள் 'எம்பெருமான்!' என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும், பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
1769 | பாரு ளீரிது கேண்மின் பருவரை பேரு மாறெடுத் தானை யடர்த்தவன் கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக் கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே. |
5.069.10 |
உலகிலுள்ளவர்களே! இது கேட்பீராக! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கருவிலி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கருவிலிக், சேர்மினே, சேர்வீராக, கொட்டிட்டை, கருவிலிக்கொட்டிட்டையைச், கேட்பீராக, நிறைந்த, பெருமான், உறைகின்ற, சூழ்ந்த, மனிதர்களே, சூழ்தண், னானுறை, உடையவனும், கேண்மி, பொல்லா, காற்று, கொட்டிட்டையைச், வாழ்வு, நாள்தோறும், யாதுநீர், திருச்சிற்றம்பலம், திருமுறை, மனிதர்காள், நாடொறும், திருக்கருவிலி, வார்பொழிற், னாருறை