முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.068.திருநள்ளாறு
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.068.திருநள்ளாறு
5.068.திருநள்ளாறு
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
1750 | உள்ளா றாததோர் புண்டரி கத்திரள் தௌளா றாச்சிவ சோதித் திரளினைக் கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை நள்ளா றாவென நம்வினை நாசமே. |
5.068.1 |
உள்ளே தன் நிறம் கெடாததாகிய ஒப்பற்ற தாமரைத் தொகுதியின் தௌவு நீங்காததாகிய சிவ ஒளிப் பிழம்பினை, தேன் நீங்காத பொன்போன்ற கொன்றைகமழும் சடையினை உடைய "நள்ளாறா!" என்று கூற நம் வினைகள் நாசமாகும்.
1751 | ஆர ணப்பொரு ளாமரு ளாளனார் வார ணத்துரி போர்த்தம ணாளனார் நாரணன் நண்ணி யேத்துநள் ளாறனார் கார ணக்கலை ஞானக் கடவுளே. |
5.068.2 |
திருமால் பொருந்தி ஏத்துகின்ற நள்ளாற்று இறைவர், வேதத்தின் பொருளாக விளங்கும் அருளை ஆள்பவர்; யானையின் தோலைப் போர்த்த மணவாளர்; எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய கலைஞானக்கடவுள் ஆவர்.
1752 | மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில் சோகம் பூண்டழல் சோரத்தொட்டான் அவன் பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே. |
5.068.3 |
மேகத்தினைத் தன் உச்சியிற் கொண்டதாகிய மேருமாமலையாகிய வில்லைக்கொண்டு, முப்புரங்களும் சோகம் பூணுமாறு கனல் சோரத் தொட்டவனாகிய அவன், தன்னொரு பாகத்திற்கொண்ட திருமாலும், நான்முகனும் வழிபடுமாறு நாகம் பூண்டு கூத்தாடும் நள்ளாற்று இறைவன்.
1753 | மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார் நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம் வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே. |
5.068.4 |
செஞ்சடையில் மலிந்த பாம்பினோடு பொலிகின்ற கங்கையை வைத்த புனிதனாராகிய கூற்றுவனை நலிந்த நள்ளாறரது அருளாற்றலையும் கண்டு இறுமாந்து மகிழ்வேன்.
1754 | உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன் இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன் நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன் மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே. |
5.068.5 |
தேன்மணக்கும் பொழிலை உடைய திருநள்ளாற்றுப்பெருமான் உற்றுப்பொருந்தியவனாய் நிறைந்து உள்ளத்தைக் குளிர்விப்பவன்; இறைவனாகிநின்று எண்ணத்தில் நிறைந்தவன்; மறம் உடையவனாய் அருச்சுனனின் பொருட்டுப் பன்றியின்பின் சென்ற மாயம் என்னையோ?
1755 | செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார் நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார் வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச் சக்க ரம்மருள் செய்த சதுரரே. |
5.068.6 |
சிவந்த வானமும் அழகிற்குத்தோற்று உள்ள மழிதற்குக் காரணமாகிய செஞ்சுடர் வீசும் சோதியரும், திகம்பரருமாகிய பாம்பினை ஆர்த்துக் கட்டிய நள்ளாற்றிறைவர் வக்கராசுரன் உயிர் போக்கியவராகிய திருமாலுக்குச் சக்கரப் படையை அருள் செய்த திறம் உடையவர்.
1756 | வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர் விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார் வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார் நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே. |
5.068.7 |
நைந்த உள்ளம் உடையவர்களுக்கு அருளும் நள்ளாற்று இறைவர் வஞ்சனைமிக்க நஞ்சினாற் பொலிகின்ற திருக்கழுத்தினர்: தெய்வச் செல்வப்பாவையாகிய உமா தேவிக்கு வேந்தர்: வஞ்சனை உடைய நெஞ்சத்தவர்களுக்கு வழி கொடாதவர்.
1757 | அல்ல னென்று மலர்க்கரு ளாயின சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான் வல்ல னென்றும்வல் லார்வளம் மிக்கவர் நல்ல னென்றும்நல் லார்க்குநள் ளாறனே. |
5.068.8 |
அலர்க்கு அல்லன் என்றும், அருளாயின சொல்லன் என்றும், சொல்லாமறைச் சோதியானாகிய வல்லன் என்றும் துதிக்க வல்லவர் வளம் மிக்கவராவர். அத்தகைய நல்லார்க்கு நள்ளாறன் என்றும் நல்லன்.
1758 | பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும் பூம்ப ணைப்பொலி கின்ற புராணனும் தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல் நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே. |
5.068.9 |
நாம் பணிந்து அடிபோற்றும் நள்ளாற்று இறைவன், பாம்பாகிய அணையத்தக்க பள்ளியினைக் கொண்ட திருமாலும், பூவாகிய பணைத்த பள்ளியிற் பொலிகின்ற புராணனாகிய நான்முகனும், தாம் பணிந்து அளக்க இயலாத ஒப்பற்ற தனித்தழலாக உள்ளவன்.
1759 | இலங்கை மன்ன னிருபது தோளிற மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர் நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும் வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. |
5.068.10 |
இலங்கை மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் இற்று மனஞ் சுழலும்படியாகத் திருக்கயிலாயப் பெருவரையின் மேல் திருவிரல் ஊன்றியவரும், நன்மை மிகுந்த திருநீற்றருமாகிய நள்ளாறரை நாள்தோறும் வலம் வந்து வணங்குவார் வினைகள் மாயும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநள்ளாறு - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நள்ளாற்று, பொலிகின்ற, என்றும், இறைவன், இலங்கை, பணிந்து, நள்ளாறன், நான்முகனும், இறைவர், திருச்சிற்றம்பலம், திருமுறை, ஒப்பற்ற, வினைகள், திருநள்ளாறு, ளாறனார், திருமாலும்