நற்றிணை - 45. நெய்தல்
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி, நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு மீன் எறி பரதவர் மகளே; நீயே, நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே: |
5 |
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி, இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? புலவு நாறுதும்; செல நின்றீமோ! பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ அன்றே; |
10 |
எம்மனோரில் செம்மலும் உடைத்தே! |
நின்னாற் காதலிக்கப்படும் இவள்தான், கடற்கரைச் சோலையிற் பொருந்திய அழகிய சிறுகுடியின்கண்ணே இருக்கின்ற, நீலநிறத்தையுடைய பெரிய கடலுங் கலங்குமாறு அதன்மேற்சென்று வலைவீசி மீனைப் பிடிக்கின்ற பரதவர் புதல்விகண்டாய்; நீதானும் நெடிய கொடிகள் காற்றாலசைந்து நுடங்குங் கடைத் தெருக்களையுடைய பழைய ஊரின்கணுள்ள கடிய செலவினையுடைய தேரையுடைய செல்வ மன்னன் காதலிற் பெற்றுவளர்த்த புதல்வனாயிராநின்றனை, ஆதலிற் குலத்திற்கே பொருத்தமில்லை; அங்ஙனம் மணப்பதாயினும், நிணத்தையுடைய சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தல் வேண்டி வெயிலிற் போகட்டு அத்தசைகளைக் கூட்டமாகிய காக்கைகள் கவராதவாறு அவற்றை ஓட்டிப் பாதுகாக்கின்ற எமக்கு நின் சிறந்த நலந்தான் யாது வேண்டிக் கிடந்தது ? ஒன்றும் வேண்டா !; சுறா நிணத்தைத் தடிந்து பரப்புதலானே யாம் புலவு நாற்றம் நாறுகின்றேம்; இந்நாற்றம் நீ பொறாயாகலின், எம்மருகில் வராதேகொள் ! அகன்றுபோய் நிற்பாய்மன்; கடனீரை விளைவயலாகக் கொள்ளுகின்ற எமது சிறிய வாழ்க்கையானது நும்மோடு ஒக்க வுயர் வுடைத்தன்று; எம்போன்ற பரதவரில் நின் போன்ற செல்வமாக்களையும் எங்கள் மரபுடைத்தாயிராநின்றது;
குறை வேண்டிய தலைவனைத்தோழி சேட்படுத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புலவு, நின், எமக்கு, வேண்டி, சுறா, பரதவர்