நற்றிணை - 254. நெய்தல்
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், துனி இல் நல்மொழி இனிய கூறியும், சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச் செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! |
5 |
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் அயினி மா இன்று அருந்த, நீலக் கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் துணை இலை தமியை சேக்குவை அல்லை- நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, |
10 |
வானம் வேண்டா உழவின் எம் கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே |
பகற்பொழுதெல்லாம் எம்முடன் வண்டல்மண்ணை வீடுபோலச் சமைத்துக் கோலஞ் செய்தும் கரைமேல் ஏறுகின்ற அலையை எற்றியும்; மலைபோல் உயர்ந்த வெளிய மணல் மேட்டிலே படர்ந்த கொடி யடும்பின் பூவைப் பறித்தும்; வருத்தந் தீர்ந்த நல்ல வார்த்தை இனியவற்றைக் கூறியும்; அங்ஙனம் நீ கூறியவற்றிற்கு விடையும் பெறாயாகி; மெல்ல நின்னூர்க்குப் போகும் பொருட்டுச் செல்லாநின்ற ஒலிக்கின்ற பெரிய கடற் பரப்பினையுடைய தலைவனே!; நேர்மையான இடத்தையுடைய உப்புப் பாத்தியிலே கடலின் நீரைக் கொணர்ந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்வதன்றி மழையை விரும்பாத வேளாண்மையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த எமது சிறுகுடியின்கண்ணே வந்து சேர்ந்து இராப்பொழுதில் அங்கே தங்கியிருந்து செல்வாயாயின்; உப்பு வாணிகராலே கொண்டுவரப்பட்ட உப்பு விலையினால் பெற்ற நெல்லைக் குற்றி ஆக்கிய அரிசிக்காணத்தை நின் குதிரை இன்று உண்ணாநிற்ப; நீயும் மலரின் கூட்டம் நன் மணங்கமழும் பெரிய பூமாலை புரளுகின்ற மார்பில் அணைக்குந் துணையின்றித் தமியே தங்குவாயல்லை; அத்தகைய துணையாகிய தலைவியை அணைத்து உறங்கப் பெறுவாய்;
தோழி படைத்து மொழிந்தது. - உலோச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 252 | 253 | 254 | 255 | 256 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உப்பு, பெரிய, சிறு, இன்று, கொடி, கூறியும்