சங்க காலம்
வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும். நெல் முக்கியப் பயிர். கேழ்வரகு, கரும்பு, பருத்தி, மிளகு, இஞ்சி, மஞ்சள், இலவங்கம் பல்வேறு பழவகைகள் போன்றவையும் பயிரிடப்பட்டன. பலா, மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் நெல் முக்கிய பயிராகும்.
சங்க காலத்தில் கைத்தொழில்கள் ஏற்றம் பெற்றிருந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சுவேலை, கப்பல் கட்டுதல், மணிகள், விலையுயர்ந்த கற்கள், தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்றவை ஒருசில கைத்தொழில்களாகும். இத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவைகள் இருந்தன. ஏனென்றால் சங்ககாலத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்பப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன. நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும், மெலிதான துணிகள் நெய்யப்பட்டதாக சங்க இலக்கியப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டது.
உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் சங்க காலத்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்கள், கிரேக்க - ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும், வணிகர்கள் பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்தனர். உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையின் அடிப்படையிலேயே நடைபெற்றது.
தென்னிந்தியாவிற்கும், கிரேக்க அரசுகளுக்கும் இடையே அயல்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. ரோமானியப் பேரரசு தோன்றிய பிறகு ரோமாபுரியுடனான வாணிபம் சிறப்படைந்தது. துறைமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்தகமையமாகத் திகழ்ந்தது. விலை மதிப்பு மிக்க பொருட்களை ஏற்றிவந்த பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்து சென்றன. தொண்டி, முசிறி, கொற்கை, அரிக்கமேடு, மரக்காணம் போன்றவை பிற சுறுசுறுப்பான துறைமுகங்களாகும். அயல்நாட்டு வாணிபம் குறித்து 'பெரிப்புளூஸ்" நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார். அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ போன்ற ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளியாலான நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. சங்க காலத்தில் நடைபெற்ற வாணிகத்தின் அளவு மற்றும் தமிழ்நாட்டில் ரோமானிய வணிகர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை இவை வெளிப்படுத்துவதாக உள்ளன. பருத்தியாடைகள், மிளகு, இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்கள், தந்தவேலைப்பாடு நிறைந்த பொருட்கள், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவை சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களாகும். தங்கம், குதிரைகள், இனிப்பான மதுவகைகள் ஆகியன முக்கிய இறக்குமதிகளாகும்.
சங்க காலத்தின் முடிவு
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் மெல்ல முடிவுக்கு வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆக்ரமித்துக் கொண்டனர். களப்பிரர்கள் ஆட்சிகுறித்து நமக்கு சொற்ப தகவல்களே கிடைக்கின்றன. இக்காலத்தில் புத்த சமயமும், சமண சமயமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னர் களப்பிரர்களை விரட்டிவிட்டு வடக்கு தமிழ்நாட்டில் பல்லவர்களும், தெற்குத் தமிழ்நாட்டில் பாண்டியர்களும் தத்தம் ஆட்சியை நிறுவினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்க காலம் , சங்க, வரலாறு, அயல்நாட்டு, இந்திய, காலத்தில், தமிழ்நாட்டில், நடைபெற்றது, உள்நாட்டு, போன்றவை, மிளகு, காலம், பொருட்களை, ரோமானியப், செய்யப்பட்ட, ரோமானிய, கிரேக்க, வாணிபம், வர்த்தகம், தங்கம், களப்பிரர்கள், சமயமும், பொருட்கள், கிடைக்கின்றன, துணிகள், வணிகர்களின், வாணிகம், முக்கிய, பெற்றிருந்தன, நாட்டிலும், பல்வேறு, மஞ்சள், இலவங்கம், விலையுயர்ந்த, கற்கள், தொழில், இஞ்சி, நெல், இருந்தன, ஆகியவற்றை, பருத்தி, இந்தியா