சத்ய சோதனை - பக்கம் 77
மணமாகாதவர்கள் போல் நடித்து வருவது அவர்களிடம் இருந்த பழக்கம். படிப்புக்கு மண வாழ்க்கை ஏற்றதல்ல என்று அங்கே கருதப்படுகிறது. ஆகையால், பள்ளிக்கூட அல்லது கல்லூரி மாணவர்கள் எல்லோரும் மணமாகாதவர்கள். நம் நாட்டில் சிறந்திருந்த பழங்காலத்திலும் இந்தப் பழக்கமே இருந்தது. அக்காலத்தில் மாணவர்கள் பிரம்மச்சாரிகள் என்றே சொல்லப்பட்டு வந்தனர். ஆனால், இன்றோ குழந்தைப் பருவத்திலேயே விவாகம் செய்து வைத்து விடும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. இப்பழக்கம் இங்கிலாந்தில் இல்லவே இல்லை. ஆகையால், தங்களுக்கு மணமாகிவிட்டது என்று ஒப்புக்கொள்ள இங்கிலாந்தில் இருந்த இந்திய இளைஞர்கள் வெட்கப்பட்டார்கள். இவ்விதம் இவர்கள் பாசாங்கு செய்து வந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. இவர்களுக்கு மணமாகிவிட்டது என்று தெரிந்துவிட்டால், இங்கிலாந்தில் இவர்கள் எந்தக் குடும்பத்தினருடன் வசிக்கிறார்களோ அக்குடும்பங்களின் இளம்பெண்களுடன் வெளியே உலாவப் போவதும், சல்லாபம் செய்வதும் முடியாது போகும். சல்லாபம் அநேகமாகக் குற்றமற்றதேயாகும். பெற்றோர்களே இதற்கு ஆதரவளிக்கிறார்கள். அந்நாட்டில் ஒவ்வோர் இளைஞனும் தனது வாழ்க்கைத் துணைவியைத் தானே தேர்ந்துகொள்ள வேண்டியவனாகிறான். அப்படியிருப்பதால் வாலிபப் பையன்களும், வாலிபப் பெண்களும் அத்தகைய உறவு கொள்ளுவது அங்கே அவசியமாகக் கூட இருக்கலாம். ஆனால், ஆங்கில இளைஞர்களுக்கு முற்றும் இயற்கையானதாக இருக்கும் இத்தகைய உறவுகளில் இங்கிலாந்துக்கு வந்ததும் இந்திய இளைஞர்களும் ஈடுபட்டு விடுவார்களேயாயின், அதன் முடிவு ஆபத்தில் முடிந்து விடக்கூடும். அப்படியே ஆகியும் விடுகிறது. நமது வாலிபர்கள் ; உணர்ச்சி வயப்பட்டுப் போய்ப் பெண்களுடன் தோழமை கொள்ளுவதற்காகப் பொய்யான வாழ்க்கை நடத்தி வருவதைக் கண்டேன் ; இத்தகைய தோழமை ஆங்கில இளைஞர்கள் விஷயத்தில் என்னதான் குற்றமில்லாததாக இருந்தாலும், இவர்களுக்கு அது விரும்பத்தகாததே. இத்தொத்து நோய் என்னையும் பற்றிக் கொண்டது. எனக்கு மணமாகி, ஒரு குழந்தைக்கும் நான் தந்தையாக இருந்தபோதிலும், மணமாகாதவன்போல் நடித்துவர நானும் தயங்கவில்லை. ஆனால், பாசாங்கு செய்பவனாக இருந்தது எனக்கு இன்பமாயும் இல்லை. எனக்கு இருந்த கூச்சமும் அடக்கமுமே இவ்விஷயத்தில் இன்னும் அதிக தூரம் போய்விடாதவாறு என்னைத் தடுத்தன. நான் வாய் திறந்து பேசவே இல்லை என்றால், என்னுடன் பேசவேண்டும் என்றோ, உலாவப் போகவேண்டும் என்றோ எந்தப் பெண்ணும் எண்ணுவதற்கில்லை.
கூச்சத்தோடு நான் ஒதுங்கியிருந்ததற்கு ஏற்றாற்போல் என்னிடம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனக்கு, நான், இல்லை, இங்கிலாந்தில், என்று, ஆனால், இருந்த - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்