நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 47
இது வரையில் எப்போது திருமணம்? எப்போது வேலை கிடைக்கும் ? எப்போது குழந்தை பிறக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஆளும் கிரகத்தின் உதவியுடன் பதில் எப்படிச் சொல்வது என்று பார்த்தோம். இப்படியே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லலாம். எந்தெந்தக் கேள்விகளுக்கு எந்த வீட்டை வைத்துப் பலன் சொல்வது என்று நாம் கீழே கொடுத்துள்ளோம். அதை வைத்துக் கொண்டு ஆளும் கிரகத்தின் உதவியுடன் பதில் சொல்ல நமது வாசகர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
எனக்கு மேற்படிப்பிற்காக கல்லூரியில் இடம் கிடைக்குமா ?
இது எல்லா மாணவர்களுக்கும் ஏற்படுகின்ற கேள்வி. இதற்கு எப்படி பதில் சொல்வது என்று பார்ப்போம். 4-ம் வீடும், 9-ம் வீடும் படிப்பினைக் குறிக்கின்றன. 11-ம் வீடு ஒருவரின் ஆசை நிறைவேறுதலைக் குறிக்கிறது. ஆக இந்த மூன்று வீடுகளையும் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் ஒருவர் மேற்கொண்டு படிக்க முடியும். தற்போது நடக்கும், தசா புக்திகளைக் குறித்துக் கொள்ளுங்கள். அப்போதிய ஆளும் கிரகத்துடன் ஒத்துப் பாருங்கள். அந்த தசா, புக்திகள் ஆளும் கிரகத்துடன் ஒத்துப் போகுமேயானால் அவருக்குக் கல்லூரிப் படிப்பு உண்டு.
எனக்கு லாட்டரியில் பரிசு கிடைக்குமா ?
லாட்டரியில் பரிசு என்பது எந்த சிரமும் இல்லாது கிடைக்கும் பணமாகும். அவ்வாறு சிரமமின்றி பரிசு கிடைத்தலைக் குறிப்பது 5-ம் வீடாகும். 5-ம் வீடு 2-ம் வீட்டுடனோ அல்லது 11-ம் வீட்டுடனோ சம்மந்தப் பட்டால் அத்தகைய பரிசு கிடைக்கும். 2-ம் வீடு பணவரவையும், 11-ம் வீடு லாபத்தையும் குறிக்கிறது அல்லவா? 5-ம் வீட்டதிபர் 2-லோ அல்லது 11-லோ இருக்குமேயாகில் அத்தகைய பணவரவு அந்த ஜாதகருக்கும் கிடைக்கும். இந்த மூன்று வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் கிடைக்கும். ஆளும் கிரகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பலன் சொல்வது சரியாக இருக்கும்.
பிரிந்த தம்பதியினர் கூடுவார்களா ?
தம்பதியருக்குள் கருத்து வேற்றுமை ஏற்படுவது சகஜம்தான். சில தம்பதியினர் மன வேற்றுமையுடன் தங்கள் காலத்தைத் தள்ளுவார்கள். சிலர் அப்படியல்ல; கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்தே போய்விடுவர். அத்தகைய தம்பதியினர் திரும்பவும் சேர்வார்களா ? என்பதுதான் நமது கேள்வி. 2, 5, 7, 11-ம் வீட்டைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் அவர்கள் ஒன்று சேர்வார்கள். 2-ம் இடம் குடும்பஸ்தானம் அல்லவா? 5-ம் இடம் என்பது 7-ம் வீட்டிற்குப் 11-ம் இடமல்லவா? 7-ம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும். ஆகவே அதையும் சேர்த்துக் கொண்டுள்ளோம். 11-ம் ஜாதகரின் லாபஸ்தானம் அல்லவா ? ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம். ஆகவே இந்த நான்கு வீடுகளையும் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் பிரிந்த தம்பதியினர் கூடுவர்.
நோய் எப்போது தீரும் ?
6-ம் இடம் ஒருவருக்கு வரும் நோயைக் குறிக்கிறது. 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 5-ம் வீடு நோய் குணமாகுதலைக் குறிக்கிறது. 11-ம் வீடு வழக்கம் போல் ஜாதகரின் நலனைக் குறிக்கிறது ஆக 5, 11-ம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் அவருக்கு குணமாகும். இங்கு முதலில் நோயி.ன் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதரணமான, காய்ச்சலாக இருப்பின் சில நாட்களில் குணம் தெரியும். காமாலை, டைபாய்டு போன்றவைகள் சில வாரங்கள் ஆகலாம். சில நோய்கள் வந்தால் சில மாதங்கள் ஆகலாம். ஆக நோயின் தன்மைக்கு ஏற்ப ஆளும் கிரகத்தின் உதவியுடன் எப்போது குணமாகும் என்று கூற வேண்டும். இதெல்லாம் படிப்பதற்கு மிக எளியதாக இருக்கும். ஆனால் அனுபவரீதி யாகப் பார்க்கும் போது அதில் உள்ள சிரமங்கள் தெரியும். அனுபவமதான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 47 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்